க்ரைம்

நெல்லிக்குப்பம் பகுதியில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டிய 4 பேர் கைது; கத்திகள், பைக் பறிமுதல்

செய்திப்பிரிவு

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் போலீஸார் கத்திகளையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீஸார் நேற்று இரவு நெல்லிக்குப்பம்- மாளிகைமேடு ரோட்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொங்கராயனூர் சாலையோரம் 5 பேர் இருசக்கர வாகனங்களுடன் நின்று கொண்டிருந்தனர். போலீஸைப் பார்த்ததும் அவர்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களை விரட்டினர். இதில் 4 பேரை போலீஸார் பிடித்தனர். ஒருவர் தப்பிச் சென்று விட்டார்.

பிடிபட்ட 4 பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் புதுச்சேரி அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியைச் சேர்ந்த உதயா (36), அரியாங்குப்பம் பூங்காநகர் தெருவைச் சேர்ந்த விவேக் (22), வில்லியனூர் கணவாய்பேட்டையைச் சேர்ந்த சிவசங்கர் (31), புதுச்சேரி பூமியான்பேட் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (20) என்று தெரியவந்தது.

மேலும் விசாரணையில் நெல்லிக்குப்பம் பகுதியில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 4 கத்திகள், 1 பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கொங்கராயனூரைச் சேர்ந்த மணியை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த 4 பேரும் விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் கை,கால் முறிந்தது. இதனையடுத்து அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

- ரமேஷ்.

SCROLL FOR NEXT