இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்ட ஜமாத் உல் முஜாகிதீன் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதியை கொல்கத்தா போலீஸார் சென்னையில் கைது செய்தனர்.
ஜமாத் உல் முஜாகிதீன் ஆஃப் பங்களாதேஷ். சுருக்கமாக ஜம்பி என அழைக்கப்படும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிஹார், மேற்கு வங்க மாநிலங்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பல குண்டுவெடிப்புகள், தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2012-ம் ஆண்டு மேற்கு வங்கம் பர்துவானில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திலும், 2013 -ல் பிஹார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்பிலும் பின்னர், 2018-ல் அதே புத்தகயாவில் தலாய்லாமாவைக் கொல்லும் நோக்கத்துடன் 2 இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கிலும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது.
இதுதவிர மேற்கு வங்கத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும் வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி ஜம்பி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இஜாஸ் அகமது என்ற தீவிரவாதியை கொல்கத்தா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தபோது 2013-ம் ஆண்டு புத்தகயா குண்டுவெடிப்பு தொடர்புடைய தீவிரவாதி ஷேக் அசதுல்லா சென்னையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னையில் பதுங்கி இருக்கும் தீவிரவாதி ஷேக் அசதுல்லாவைப் பிடிக்க கொல்கொத்தா தீவிரவாத தடுப்பு போலீஸார் திட்டமிட்டனர். இந்தியாவில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவிட்டு, என்.ஐ.ஏவால் தேடப்படும் ஷேக் அசதுல்லா சென்னை நீலாங்கரையில் சாதாரண கட்டிடத் தொழிலாளியாக தினக்கூலியாக வேலை செய்து வட மாநிலத் தொழிலாளிகளுடன் தொழிலாளியாக கடந்த 10 மாதங்களாகப் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
உடனடியாக சென்னை போலீஸாருக்குத் தகவல் கொடுத்த கொல்கத்தா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னை வந்தனர். போலீஸார் விசாரணையை அடுத்து நீலாங்கரை, அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஷேக் அசதுல்லா என்கிற ராஜா என்ற அந்த நபரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் பர்துவான் பகுதியைச் சேர்ந்த அசதுல்லா கைது செய்யப்பட்டவுடன்தான் அவர் தீவிரவாதி என்பதே அங்குள்ள சக தொழிலாளிகளுக்குத் தெரியவந்துள்ளது.
தீவிரவாதி அசதுல்லாவைக் கைது செய்து, உடனடியாக என்.ஐ.ஏ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற கொல்கொத்தா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் அங்கு விசாரணை முடிந்த பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் ஷேக் அசதுல்லாவை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். அசதுல்லா மீது இந்திய அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது, பயங்கர ஆயுதங்களைப் பதுக்கியது உட்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.