திருநெல்வேலி,
நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (திங்கள் கிழமை) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இளைஞர் ஒருவர், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பணியில் இருந்த தீயணைப்புப் படை வீரர்கள் அவரை மீட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாளையங்கோட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (20) என்பது தெரியவந்தது. திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சுகந்தன் என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், அனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதால், தீக்குளிக்க முயன்றதாகவும் கூறினார்.
இதையடுத்து சண்முகசுந்தரத்தை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் சில இளைஞர்களும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தங்களிடம் சுகந்தன் பண மோசடி செய்ததாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
-த.அசோக் குமார்