க்ரைம்

தங்கத்தை உருக்கி நூதன முறையில் கடத்தல் கோவை விமான நிலையத்தில் 2 பேர் சிக்கினர்

செய்திப்பிரிவு

கோவை

கோவை விமான நிலையத்தின் வழியாக நூதன முறையில், ரூ.42.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற 2 இளைஞர்களிடம், மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங் களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, கொழும்பு ஆகிய வெளிநாடு களுக்கும் விமானங்கள் இயக்கப் படுகின்றன. இங்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், நேற்று அதிகாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இளையாங்குடியைச் சேர்ந்த ஜியா உல் ஹக் (23), மலப்புரத்தை சேர்ந்த அமீர் சோகைல்(23) ஆகி யோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து சோதனை செய்தனர்.

அப்போது, இருவரும் ரூ.42.15 லட்சம் மதிப்புள்ள 1081.390 கிராம் அளவு தங்கத்தை அரைத்து பொடி யாக்கி, காய்ச்சி பசை போல் தயாரித்து ஜீன்ஸ் பேன்டின் உட்புறத்தில் தேய்த்து மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், நூதன முறையில் தங்கத்தை கடத்திவந்த இருவரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT