கோவை
கோவை மாநகரில் காவல்துறை வேன் மோதி, பெண் உயிரிழந்தார். இதுதொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை ராஜவீதி, தேர்முட்டி அருகே உள்ள தேர்நிலைத் திடலில், இன்று காலை சில இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையொட்டி பாதுகாப்புப் பணிக்காக, மாநகர காவல்துறைக்குச் சொந்தமான வேனில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காவலர்கள் தேர்நிலைத் திடலுக்கு வந்தனர்.
அந்த வேனை, மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ரகு குமார் ஓட்டி வந்தார். வேனில் இருந்து காவலர்கள் இறங்கிய பின்னர், ரகு குமார் சாலையோரம் நின்றிருந்த வேனை அங்கிருந்து நகர்த்தினார். அப்போது சாலையைக் கடந்து மறுமுனைக்கு செல்ல முயன்ற பெண் ஒருவர் வேனின் முன்புறம் வந்தார்.
வேன் மெதுவாக சாலையில் நகரத்துவங்கியதும் வேனின் முன்புறம் நடந்து சாலையை கடக்க முயன்ற பெண் வேன் தன் மீது மோதாமல் இருக்க வேன் முன்பு ஓடித்தப்பிக்கலாம் என ஓடத்துவங்கினார். ஆனால் வேனை ஓட்டிய ஓட்டுநர் தனக்கு முன் ஒரு பெண் ஓடுவதை முற்றிலும் கவனிக்காமல் அந்தப்பெண் மீது வேனை மோதினார்.
வேன் பின்புறம் மோதிய வேகத்தில் சாலையில் குப்புற மடங்கிவிழுந்த பெண்மீது அந்த வேனின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீஸார் வேனை கையைக்காட்டி நிறுத்தினர். ஆனால் அவர் மீது முழுமையாக ஏறி இறங்கி நசுக்கிய வேன் 100 அடிக்கும் மேலாக தள்ளி வந்து நின்றது.
வேன் மோதி மேலே ஏறி இறங்குயதால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அந்த பெண் உயிரிழந்தார். இதைப்பர்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாநகரக் காவல்துறையின் மேற்கு உட்கோட்ட போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் சசிகலா தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தினர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் பிரதான சாலையில் உள்ள பேரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மனைவி கலா(55) என்பது தெரிய வந்தது. கலா, கோவை ஆர்.ஜி வீதியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
வேலைக்குச் செல்வதற்காக அவர் வந்தபோது, எதிர்பாராத விதமாக வேன் மோதி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் ரகு குமார் மீது போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விபத்து நடந்தபோது அந்த சம்பவங்கள் அருகிலுள்ள கண்காணிப்புக்கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் மேற்கண்ட சம்பவத்தில் உயிரிழந்தப்பெண் தப்பிக்க ஓடுவதும் , வேன் அவர் மீது ஏறி இறங்கும் பதைபதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.