மதுரை,
மதுரையில் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வகுப்பறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார் மாணவி அர்ச்சனா. இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளிக்கு வரும்போதே வீட்டிலிருந்து சேலை ஒன்றையும் பையில் மறைத்து எடுத்துவந்துள்ளார். வகுப்பறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஃபேனில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வகுப்பறை பூட்டியிருப்பதைப் பார்த்த மற்ற மாணவிகள் ஜன்னல் வழியாகப் பார்த்துள்ளனர். அப்போது அர்ச்சனா தூக்கில் தொங்குவதைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரியவர அவர்கள் பெற்றோருக்கு தெரிவித்தனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் உறவினர்கள் ஆத்திரமடைந்து பள்ளியை முற்றுகையிட்டனர். இறந்துபோன மாணவியின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்ல முற்பட்டனர்.
அப்போது போலீஸார் அதனைத் தடுத்துள்ளனர். இதனால் போலீஸாருக்கும் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவழியாக போலீஸார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலையால் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை..
தற்கொலை செய்து கொண்ட மாணவி அர்ச்சனா கடந்த ஒரு வாரமாகவே பள்ளிக்கு வரவில்லை. அவருக்கு வீட்டில் ஏதாவது பிரச்சினையா இல்லை பள்ளியில் ஏதாவது தொந்தரவா என்ற கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று பள்ளி திரும்பிய நிலையில் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.