புதுச்சேரி
புதுச்சேரி வாணரபேட்டையில் கோயில் திருவிழாவுக்கு வந்த ரவுடி மீது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசியது. தப்பி ஓடிய ரவுடியைப் பின்தொடர்ந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வாணரபேட்டையில் உள்ள காளியம்மன் கோயிலில் நேற்று (செப்.2) திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க ரவுடி சாணிகுமார் வந்தார். அப்போது மர்ம நபர்கள் சாணிகுமார் மீது வெடிகுண்டு வீசினர். இதில் அவர் தப்பி ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் முதலியார்பேட்டை போலீஸார் வந்து பார்வையிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாணிகுமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனுடைய தொடர்ச்சியாக வெடிகுண்டு வீசி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் முதலியார்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து வெடிகுண்டு வீச்சில் தப்பிய ரவுடி சாணிகுமாரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தப்பியோடிய போது காளியம்மன் கோயில் தோப்புப் பகுதியில் சாணிகுமாரை, மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது இன்று போலீஸாருக்குத் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
செ.ஞானபிரகாஷ்