க்ரைம்

ஏடிஎம் மோசடி நபரின் லேப்டாப்பில் 30,000 வாடிக்கையாளர்களின் டேட்டா: அதிர்ந்து போன போலீஸார்

செய்திப்பிரிவு

டெல்லி

ஏடிஎம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபரின் லேப்டாப்பில் 30,000 பேரின் வங்கி தகவல்கள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவை மிரட்டி வந்த ஏடிஎம் கொள்ளைக் கூட்ட தலைவனான பர்வேஷ் டாகர் என்பவரை குஜராத் மாநிலம் ட்வார்கா நகரில் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கியும், சில போலி ஏடிஎம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் பர்வேஷின் தலைமையின் கீழ் ஒரு குழுவே செயல்படுவதும் அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 1500 பேரின் ஏடிஎம் தகவல்களை திருடி பல கோடிகளை சுருட்டியது தெரியவந்தது.

உடனடியாக விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸாருக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தது. இது குறித்து குற்றப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது,

”பர்வேஷ் டாகரும் அவரது கூட்டாளிகளும் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை திருடுவதற்காக இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை செலுத்தும் இடத்தில் ஒரு ஸ்கிம்மர் கருவியையும், பணத்தை எடுப்பவர்களின் பின்நம்பரை தெரிந்து கொள்ள கீ பேடில் ஒரு சிறிய கேமராவையும் பொருத்தி விடுவார்கள். இதன் மூலம் பணம் எடுப்பவர்களின் வங்கி தகவல்கள் அந்த ஸ்கிம்மர் கருவியிலும், பணம் எடுப்பவரின் கை அசைவுகள் கேமராவிலும் பதிவாகி விடும்.

100லிருந்து 150 பேர்களின் தகவல்களை சேகரித்த பிறகு கொள்ளையர்கள் அந்த ஸ்கிம்மர் கருவியை அங்கிருந்து எடுத்து விடுவார்கள். பின்னர் அவற்றை தங்கள் லேப்டாப்பில் சேமித்து வெற்று ஏடிஎம் கார்டுகளில் பதிந்து விடுவார்கள்.

பின்னர் அந்த அட்டைகளை பயன்படுத்தி பணத்தை எடுத்து தங்களுக்கு பகிர்ந்து கொள்வது கொள்ளையர்களின் வழக்கமாக இருந்துள்ளது. இப்படியாக அவர்கள் மாதம் 30 லட்சம் ரூபாய் வரை திருடி வந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களில் வந்த புகார்களின் அடிப்படையில் டெல்லி குற்றப் பிரிவு போலீஸார் கொள்ளைக் கூட்டத்தை பின் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் ட்வார்கா நகரில் பர்வேஷ் டாகரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் ராஜஸ்தான், கோவா, உத்தரகாண்ட், உ.பி, ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 30,000 பேரின் வங்கித் தகவல்கள் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களின் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் ஏடிஎம் இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீஸார் வலியுறுத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலும் இதே போல ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம் திருட்டில் ஈடுபட்ட பல்கேரியா நாட்டை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT