திருச்சி
வங்கியில் கவனத்தை திசை திருப்பி ரூ.16 லட்சம் ஏடிஎம் பணத்தைத் திருடிச் சென்ற இளைஞரை சாமர்த்தியமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கி திருச்சி காவல் ஆணையர் பாராட்டினார்.
திருச்சி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் தெருவில் சிட்டி யூனியன் வங்கிக் கிளை உள்ளது. கடந்த 20-ம் தேதி இந்த வங்கியிலிருந்து அருகிலுள்ள முசிறி, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப தனியார் ஏஜென்சி அமைப்பு பணத்தைப் பெற்று பைகளில் நிரப்பி வைத்துக்கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ரூ.16 லட்சம் வைக்கப்பட்டிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு மாயமானார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் காட்சிகள் தெளிவாக இல்லாததால் பணம் திருடிய நபர் பற்றிய தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் பணத்தைத் திருடிய நபர் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அளவுக்கதிகமான போதையில், சவாரிக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையாவிடம் தனக்கு தங்குவதற்கு ஒரு விடுதி வேண்டும் அழைத்துச் செல்ல முடியுமா என கேட்டுள்ளார்.
அவரது பையில் கட்டுக்கட்டாக 100, 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் முருகையா, சந்தேகமடைந்து நைச்சியமாகப் பேசி அவரை விடுதிக்கு அழைத்துச் செல்வதுபோன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் ஆட்டோவைக் கொண்டுபோய் நிறுத்தி போலீஸாரிடம் அவரைப் பிடித்துக் கொடுத்தார்.
நடந்ததை ஆட்டோ ஓட்டுநர் முருகையா போலீஸாரிடம் கூற, அந்த போதை இளைஞரைப் பிடித்து விசாரித்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் வங்கியில் 16 லட்ச ரூபாய் பையைத் திருடிக்கொண்டு வந்த நபர் எனத் தெரியவந்தது. திருச்சி பாலக்கரை, அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்டீபன் என்ற அந்த நபரை பெரம்பலூர் நகர போலீஸார், திருச்சி போலீஸாரிடம் பணத்துடன் ஒப்படைத்தனர். ஸ்டீபனிடம் வங்கியில் அவர் திருடிய ரூ.16 லட்சத்தில் ரூ.12 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.
இந்தச் சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு போலீஸாரிடம் அந்த இளைஞரை ஒப்படைக்கவில்லை என்றால் அவர் வெளிமாநிலம் தப்பிச் சென்றிருக்கலாம். வங்கிப் பணமும் மீட்கப்பட்டிருக்காது. நேர்மையாக சமூக உணர்வுடனும், சமயோசித புத்தியுடனும் செயல்பட்டு திருடனைப் பிடித்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் முருகையாவை, மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
அவரது செயலுக்கு நேரிலும், சமுக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்தன. அவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களிலும் வெளியாகின. இந்நிலையில் திருச்சியில் தனியார் வங்கியில் திருட்டுப் போன 16 லட்சம் ரூபாய் பணத்தை மீட்க உதவிய பெரம்பலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையாவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, அவருக்கு சான்றிதழுடன் 10 ஆயிரம் ரூபாய் வெகுமதியும் வழங்கினார்.