மறைந்த திமுக முன்னாள் எம்.பி. திருச்சி செல்வராஜின் ரயில்வே சலுகை அட்டையைப் பயன்படுத்தி, பயணம் செய்த அவரது மகன் கலைராஜ் ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்.
திமுக முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி., முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவர் என்.செல்வராஜ் (75). அதிமுகவில் இணைந்த இவர் கடந்த மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். 1980-ம் ஆண்டு திருச்சி தொகுதி திமுக எம்.பி.யாக இருந்தார். இவர் 1987-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்தார்.
பின்னர் மதிமுக தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்த அவர், பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்து 2006-ம் ஆண்டு முசிறி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று 2006-11-ம் ஆண்டு திமுக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், அவருக்கு ரயில்வே சலுகை அட்டை வழங்கப்பட்டு இருந்தது. இதனைப் பயன்படுத்தி அவரும் அவரது மனைவி இருவரும் ஆயுட்காலம் வரை முதல் வகுப்பில் கட்டணமின்றிப் பயணம் செய்ய முடியும்.
செல்வராஜ் மறைவுக்குப் பின் அவரது மனைவிக்கு மட்டும் இந்தச் சலுகை இருந்தது. இந்நிலையில் பெங்களூரு மெயில் ரயிலில் ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையிட்டனர். அப்போது, ரயிலில் பயணம் செய்த மறைந்த எம்.பி. செல்வராஜின் மகன் கலைராஜிடம் டிக்கெட்டைக் கேட்டுள்ளனர், ஆனால் அவர் டிக்கெட்டுக்குப் பதில் மறைந்த தனது தந்தையின் சலுகை அட்டையைக் காண்பித்துள்ளார்.
தந்தையின் சலுகை அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்ததும், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததும் குற்றச்செயல் என்பதால் ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், கலைராஜ் மீது வழக்குப் பதிவு செய்த சென்னை ரயில்வே போலீஸார், அவரைக் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.