சென்னை மாதவரம் வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு திரும்பிய பெரியவரை நூதன முறையில் ஏமாற்றி பணத்தை திருடிச் சென்ற இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மாதவரம் அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(58). தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய அவர் அதிலிருந்து ஓய்வுப்பெற்றார். தான் பணிபுரிந்து வந்த தனியார் நிறுவனத்திலிருந்து வரவேண்டிய செட்டில்மெண்ட் தொகை சில நாட்களுக்குமுன் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
தனது பணத்தேவைக்காக ரூ. 1 லட்சத்தை எடுக்க அவர் கணக்கு வைத்துள்ள புழல் கேம்ப் அருகிலுள்ள இந்தியன் வங்கிக்கு நேற்றுச் சென்றார். தனது கணக்கிலிருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்தார். அதை ஒரு பையில் போட்டு தனது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டாங்க் கவரில் வைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
புழல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்ச் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் சீனிவாசனிடம், சட்டைப்பையிலிருந்து 100 ரூபாய் கீழே விழுந்தது என்று கூறியுள்ளனர். எங்கே என்று சீனிவாசன் கேட்டிருக்கிறார். அதோ அங்கே கிடக்கிறது பாருங்கள் என ஒரு பத்தடித்தள்ளி கைகாட்டியுள்ளனர்.
சீனிவாசனுக்கு சரியாக தெரியாததால் மோட்டார் பைக்கை ஸ்டாண்ட் போட்டுவிட்டு கீழே கிடப்பதாக சொன்ன நூறு ரூபாயை எடுக்கச் சென்றுள்ளார். இந்த நேரத்தில் பைக்கின் பெட்ரோல் டாங்க் கவரிலிருந்த ரூ.1 லட்சம் பணத்தை இளைஞர்கள் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
சிறிது தூரம் சென்றப்பின் கீழே நூறு ரூபாய் இல்லாததை கண்ட சீனிவாசன் எங்கே பணம் கிடக்கிறது என இளைஞர்களை கேட்க திரும்பி பார்த்தப்போது அவர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்வதைப்பார்த்து சந்தேகமடைந்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ.1 லட்சம் பணம் இருக்கிறதா என ஓடிவந்து பார்த்தபோது பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பணத்தை திருடவே நூதனமுறையில் தன்னை ஏமாற்றி திசைத்திருப்பிவிட்டு இரண்டு இளைஞர்களும் காரியத்தை முடித்து பறந்துவிட்டனர் என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்த சீனிவாசன் இதுப்பற்றி புழல் போலீஸி புகார் அளித்தார்.
புகாரைப்பெற்ற போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி கேமரா ஏதேனும் உள்ளதா? என பார்க்க அருகிலிருந்த பள்ளியில் சிசிடிவி கேமரா இருந்ததைப்பார்த்து அதில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து பணத்தை திருடிச் சென்ற இளைஞர்களின் படத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் வங்கியில் பெரிய தொகையை எடுக்கும்போது அக்கம் பக்கத்தில் தங்களை யாரும் கண்காணிக்கிறார்களா என்று கவனமுடன் இருக்கவேண்டும், பணத்தைக்கைப்பற்ற பல வகைகளில் கவனத்தை திசைத்திருப்பும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.