க்ரைம்

தலைக்கவசம் அணியாமல் பயணம்: போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஹெல்மட் சட்டத்தை கட்டாயம் அமல் படுத்தவேண்டும் என உயர் நீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சமீபத்தில் ஹெல்மட் அணியாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

மேலும் காவலர்கள் ஹெல்மட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதுகுறித்து டிஜிபி திரிபாதி கட்டாயம் காவலர் ஹெல்மட் அணியவேண்டும், தவறினால் துறை ரீதியாக நடவடிக்கை என்று அனைத்து காவலர்களுக்கும் உத்தரவிட்டார். அதன்பின்னர் தி.நகரில் உதவி ஆய்வாளர் மதன்குமார் என்பவரை தெற்கு மண்டல இணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்தார்.

அதன்பின்னர் காவல்துறையினர் கட்டாயம் ஹெல்மட் அணிந்து வாகனங்களில் பயணிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஹெல்மட் அணியாமல் சென்று சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்.ஆர்.எம்.சி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் பாலு இவர் கடந்த 27-ம் தேதி அன்று காலை சுமார் 10.45 மணியளவில் எஸ்.ஆர்.எம்.சி போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட சபாநகர் சந்திப்பில் சீருடையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி சென்றதை செல்போனில் பதிவு செய்த சிலர் வீடியோ காட்சியாக எடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமுக வலைதளத்தில் பதிவிட அது வைரலானது.

இந்த விவகாரம் காவல்துறை மேலதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து அவர் தலைக்கவசம் அணியாமல் சென்றாரா? என்பதை ஆய்வு செய்ய போக்குவரத்து காவல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சபாநகர் சந்திப்பின் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சிப்பதிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றது தெரியவந்தது. அவர் காவல்துறையின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதால். சென்னை பெருநகர போக்குவரத்து காவல். மேற்கு மண்டல துணை ஆணையர் எஸ்,லட்சுமி, ஹெல்மட் அணியாமல் பயணித்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாலுவை நேற்று பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்,

SCROLL FOR NEXT