சென்னை
யானைக்கவுனி தங்கும் விடுதியில் போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 கிலோ தங்கத்துடன் இரண்டு கேரள நபர்கள் நேற்று இரவு சிக்கினர். தங்கம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கையின் பேரில் தமிழகம் முழுவதும் ரோந்துப் பணியை அதிகரிக்கவும், தங்கும் விடுதிகளில் சோதனையிடவும், வாகனச் சோதனையை அதிகப்படுத்தவும் டிஜிபி திரிபாதி அனைத்து மாவட்டக் காவல்துறைக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையிலும் வாகனச் சோதனை, விடுதிகளில் சோதனை, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் யானைக்கவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர்.
இதில் யானைக்கவுனியில் உள்ள பீமாஸ் தங்கும் விடுதியில் சோதனையிட்டபோது ஒரு அறையில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்களிடம் விதவிதமான ஆபரணத் தங்கங்கள் சிக்கின. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர்.
கேரளாவில் உள்ள தங்க நகைக்கடைக்கு ஆபரணத் தங்கத்தை ஆர்டரின்பேரில் செய்து எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களிடம் தங்கத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் மொத்த எடை 5 கிலோ, அதன் மதிப்பு ரூ.2 கோடி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஜான்சன் மற்றும் அனில் என்பதும் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் கைப்பற்ற நகைகள் ஆவணங்கள் இல்லாததால் நகைகளையும், இரண்டு நபர்களையும் வருமான வரித்துறையினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.