சித்தரிப்புப் படம் 
க்ரைம்

பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் பயங்கரம்: உயர் அதிகாரியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்ட ராணுவ வீரர்

செய்திப்பிரிவு

சென்னை

பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் தனக்கு தண்டனை வழங்கிய உயர் அதிகாரியை அவருக்கு கீழ் வேலை செய்யும் ராணுவ வீரர் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பணியாற்றும் ராணுவ அதிகாரிகளுக்கான குடியிருப்பு பல்லாவரத்தில் உள்ளது. ராணுவ பயிற்சி மையத்தில் ஜம்மு காஷ்மீர் 17 வது பட்டாலியன் ஆர்மியில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷ்(38) ஹவில்தாராக பணியாற்றி வந்தார். ஆயுதக்கிடங்கு பாதுகாப்புப்பணி இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

பிரவீன்குமார் ஜோஷியின் கீழ் பஞ்சாப்பைச் சேர்ந்த சிப்பாய் அந்தஸ்துடைய ஜெக் ஷீர் சிங்(21) என்ற 21 வயது வீரர் ரைஃபில்மேன் பணியில் இருந்தார். நேற்று இருவருக்கும் பல்லாவரம் குவார்டர் கார்ட் என்னுமிடத்தில் இரவுப்பணி போடப்பட்டிருந்தது. பணியில் ஒழுங்கீனமாக இருந்ததால் நேற்றிரவு 2 மணி அளவில் ஹவில்தார் பிரவீன்குமார் ஜோஷி ரைஃபில்மேன் ஜெக்‌ஷீர் சிங்குக்கு சிறிய தண்டனை கொடுத்தார்.

பின்னர் அவருடைய இருப்பிடத்திற்கு தூங்கச் சென்றுவிட்டார். தனக்கு தண்டனை அளித்ததால் ஆத்திரத்தில் இருந்த ஃரைபில்மேன் ஜெக்‌ஷீர் சிங் நள்ளிரவு 3 மணி அளவில் அதிகாலை 3 மணி அளவில்வீன்குமார் ஜோஷி உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றுள்ளார்.

பிரவீன் குமார் ஜோஷியை நெஞ்சில் 3 முறை சுட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஜெக் ஷீர் சிங், பின்னர் தன்னை தானே வயிற்றில் சுட்டுக் கொண்டு அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு பரபரப்பாக அங்கு விரைந்துச் சென்ற சக அதிகாரிகள், பிரவீன் குமார் ஜோஷியும், ஜெக் ஷீர் சிங்கும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு பல்லாவரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

ராணுவ மேஜர் உல்லாஸ் குமார் புகாரின்பேரில் பல்லாவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது உடல்களும் மீட்கப்பட்டு நந்தம்பாக்கம் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.

SCROLL FOR NEXT