க்ரைம்

மதுரையில் காவலர் தேர்வு எழுதிய செயின் பறிப்பு திருடன்: சுற்றிவளைத்துப் பிடித்த போலீஸ்

செய்திப்பிரிவு

மதுரை,

மதுரையில் காவலர் தேர்வு எழுதிய செயின் பறிப்பு திருடனை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் மீது பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. ஓரிடத்தில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து அவரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வில் விஜயகாந்த் பங்கேற்று தேர்வு எழுதிக் கொண்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவலர் தேர்வுக்கு விஜயகாந்த் விண்ணப்பித்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் இது அம்பலமானது.

மேற்படி விசாரணையில், அழகர்கோவில் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விஜயகாந்த் தேர்வு எழுதிக் கொண்டிருப்பதை போலீஸார் உறுதி செய்தனர். உடனடியாக தேர்வு நடைபெற்ற இடத்திற்கு போலீஸார் விரைந்தனர்.

விஜயகாந்த் அங்கு சலனமே இல்லாமல் தேர்வு எழுதி கொண்டிருந்தார். அவர் தேர்வு எழுதியதும் தனிப்படை காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செயின் பறிப்பு திருடனே காவலர் தேர்வு எழுதவந்த சம்பவம் பொதுமக்களிடம் மட்டுமல்ல காவல்துறை மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT