திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தனியார் வங்கியில் திருடப்பட்ட 3,710 கிராம் அடகு நகைகளுக்கு உரியவர்களான 19 பேரிடம் தங்க நகைகளை திருப்பி வழங்குவதாக வங்கி நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் போலி ஆவணம் தயாரித்து ரூ.1.16 கோடி மதிப்பில் 3,710 கிராம் அடகு நகைகளை திருடிய வழக்கில் முதுநிலை மேலாளர் சுரேஷ், பாதுகாப்பு பெட்டக அறை பொறுப்பாளர்கள் சந்தான ஹரி விக்னேஷ், லாவண்யா, உதவி மேலாளர்கள் தேன்மொழி, இசைவாணி மற்றும் நகை மதிப்பீட்டாளர் கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று முன் தினம் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கூறும்போது, “கரூர் வைஸ்யா வங்கியில் அடகு நகைகள் திருடுபோனது குறித்து கடந்த 3 மாதங்களாக தலைமை நிர்வாகம் மூலம் சிறப்பு குழு விசாரணை நடத்தி வந்துள்ளது. அதில், 20 பைகளில் இருந்த 3,710 கிராம் தங்க நகைகள் மாயமானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, பிரபல தொழிலதிபர்கள் உட்பட 19 பேருக்கு சொந்தமானது. போலி ஆவணம் தயாரித்து நகை கடன் முடிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலில் முதுநிலை மேலாளர் சுரேஷ் உட்பட 7 பேருக்கு தொடர்பு இருக்கிறது. ஆனால், ஒருவர்கூட குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. 3,710 கிராம் தங்க நகைகள் திருடுபோனது உறுதியானதால், நகைகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த முதுநிலை மேலாளர் உட்பட 5 ஊழியர்கள் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்த நகை மதிப்பீட்டாளர்கள் 2 பேர் உட்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளோம்.
திருடுபோன அடகு நகை கள் மீட்கப்படவில்லை. அது எங்கு இருக்கிறது என்றும் தெரிய வில்லை. இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து காவல் துறைக்கு எந்த புகாரும் வரவில்லை. அவர்களது அடகு நகைகளை திருப்பி வழங்க வங்கி நிர்வாகம் உரியவர்களிடம் உறுதி அளித்துள்ளது” என்ற னர்.