காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடியில் கஞ்சா வியாபாரம் செய்த நபரைப் பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஜாமீனில் வெளியே வந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டியதில் ஊர் தலைவர் உயிரிழந்தார். 6 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி, அகரம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். அப்பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். இதனால் இளம் தலைமுறையினர் சீரழிவதும், கஞ்சா போதையில் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்தது. இந்நிலையில் கஞ்சா விற்பனையை முடிவுக்குக் கொண்டுவர ஊர் மக்கள் நினைத்தனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் தலைவர் தனஞ்செழியன் மூலம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. கஞ்சா வியாபாரத்தில் முக்கியப் புள்ளியான புருஷோத்தமனைப் பொதுமக்களே பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். கைதான ஆத்திரத்தில் அனைவரையும் பழிவாங்குவதாகச் சபதமிட்டு சிறைக்குச் சென்றார் புருஷோத்தமன். அதன் பின்னர் ஊரில் எந்த அசம்பாவிதமும் இல்லை, கஞ்சா விற்பனையும் இல்லை.
இந்நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சா வியாபாரி புருஷோத்தமன், 3 மாதம் கழித்து நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். ஊருக்குள் வந்தவர் பொதுமக்கள் அனைவருக்கும் சவால் ஒன்றை விட்டுள்ளார். தான் உள்ளே போனதால் வக்கீலுக்குச் செலவழித்த பணத்தை அனைவரும் வசூலித்து தனக்குக் கொடுக்கவேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கஞ்சா வியாபாரி புருஷோத்தமனைத் திட்டி அடித்து விரட்டினர். இந்த சூழலில் புருஷோத்தமன், அரக்கோணத்தில் உள்ள தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து இன்று காலை மறுபடியும் கோவிந்தவாடி பகுதிக்கு வந்தார்.
திடீரென பட்டாக்கத்தியுடன் புருஷோத்தமன் தலைமையிலான ரவுடிக்கும்பல் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை மறித்து சரமாரியாக வெட்டியது. போலீஸில் தன்னைப் பிடித்துக் கொடுத்த ஊர் தலைவர் தனஞ்செழியனை தேடிப்பிடித்து அந்தக் கும்பல் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவர்கள் பொதுமக்களை விரட்டி விரட்டித் தாக்கியதில் மேலும் 6 பேருக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
புருஷோத்தமன் தலைமையிலான கும்பல் அங்கிருந்த வீடு, கடைகளையும் சூறையாடினர். பின்னர் அங்கிருந்து அனைவரும் தப்பி ஓடினர். தாக்குதலில் பலத்த காயமடைந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா வியாபாரி புருஷோத்தமன் அவரது கூட்டாளிகளை பாலுச்செட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். வழக்கமாக சினிமாவில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். ஆனால் நிஜத்திலேயே ஒரு ரவுடி, ஆட்களைத் திரட்டி ஊரைச் சூறையாடி ஊர் தலைவரைக் கொன்றது அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.