விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்தில் குற்றாலத்திற்குச் சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் முகமது பிலால் (32). இவரது நண்பர் செல்வம் (26). இருவரும் நேற்று இரவு மதுரையிலிருந்து குற்றாலத்திற்கு காரில் புறப்பட்டனர். காரை ஒத்தக்கடையைச் சேர்ந்த யாசிக் அலி (42) ஓட்டி வந்தார்.
இதே போன்று, கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (50), அவரது மனைவி செல்வராணி (46). மகன்கள் ராஜ்குமார் (22), ரஞ்சித்குமார் (18), மகள் ஸ்ரீநிதி (17) ஆகியோர் குற்றாலம் சென்றுவிட்டு ஒரு காரில் கும்பகோணம் திரும்பிக்கொண்டிருந்தனர்.
காரை கரூர் மாவட்டம் அவக்குறிச்சியைச் சேர்ந்த காளிதாஸ் (30) என்பவர் ஓட்டி வந்தார். திருமங்கலம்- ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரி செக்போஸ்ட் அருகே சென்றபோது முன்னால் சென்ற காரை காளிதாஸ் முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது, மதுரையிலிருந்து குற்றாலத்திற்குச் சென்ற முகமது பிலால் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதோடு, காளிதாஸ் முந்திச் செல்ல முயன்ற காரும் விபத்தில் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் வந்த முகமது பிலால் மற்றும் கார் ஓட்டுநர் யாசிக் அலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் வந்த செல்வம், பாலசுப்பிரமணி, செல்வராணி, ராஜ்குமார், ரஞ்சித்குமார், ஸ்ரீநிதி மற்றும் ஓட்டுநர் காளிதாஸ் ஆகியோர் 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர். விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.