க்ரைம்

ஓசி டீ தர மறுத்ததால் ஆத்திரம்: டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த கும்பல்- மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் ஓசி டீ கொடுக்காததால் ஆத்திரமடைந்த 5 பேர் கும்பல், டீக்கடைக்காரரை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மாரிமுத்து(வயது 46). இவர் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டிற்கு மேலாக டீ கடை நடத்தி வருகிறார். இன்று காலை 5.50 மணி அளவில் வழக்கம்போல் மாரிமுத்து டீ போடுவதற்காக அடுப்பில் பால் வைத்து காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது.

அவர்கள் மாரிமுத்துவிடம் டீ கேட்பதுபோல் நடித்துவிட்டு மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றனர். சுதாரித்துக் கொண்ட மாரிமுத்து அவர்களிடம் இருந்து தப்பி தெருவில் சத்தம் போட்டம்படியே ஓடியுள்ளார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு பைக்குகளில் தப்பி ஓடியுள்ளது. ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரிமுத்துவை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர் செல்லும் வழியிலே உயிரிழந்தார். அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டீக்கடைக்காரரை இவ்வளவு வெறித்தனமாக ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம், மதுரையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்த தல்லாகுளம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடந்த சம்பவங்களை பொதுமக்களிடம் விசாரித்தனர். கொலை நடந்தது அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் எதற்காக இந்த கொலை நடந்தது என்பது தெரியாது என்பதாகவே போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இறந்த மாரிமுத்துவுக்கு அமுதா என்ற மனைவியும், முத்துமகாராஜா என்ற மகனும், முத்து மகரிஷி என்ற மகளும் உள்ளனர். மகன் முத்து மகாராஜா பிகாம் முதலாம் ஆண்டு படிக்கிறார். முத்து மகரிஷி, பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

போலீஸார் கூறுகையில், "கடந்த சில நாளுக்கு முன் மாரிமுத்து டீ கடைக்கு சிலர் டீ குடிக்க வந்துள்ளனர். அவரும் டீ போட்டுக் கொடுத்துள்ளார். டீ குடித்த அவர்கள் காசு கொடுக்காமல் புறப்பட முயன்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த மாரிமுத்து அவர்களிடம் டீக்கு காசு கேட்டுள்ளார். அவர்களோ எங்களிடமெல்லாம் டீக்கு காசு கேட்கக்கூடாது. நாங்களும் தர மாட்டோம் என்று தெனாவட்டாக பேசியுள்ளனர். அதிருப்தியடைந்த மாரிமுத்து அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த முன் விரோதத்தில் அவர்கள் திரும்பி வந்து மாரிமுத்துவை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கிறோம். வேறு சில கோணங்களிலும் விசாரிக்கிறோம்" என்றனர்.

ஓசி டீ விவகாரம், கடைசியில் டீக்கடைக்காரர் கொலையில் முடிந்தது விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகளுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT