க்ரைம்

மதுரை நகர் எல்லைக்குள் புறநகர் காவல் நிலையம்: புகார் கொடுக்கச் செல்லும் மக்கள் குழப்பம்

என்.சன்னாசி

மதுரை நகர் எல்லைக்குள் புறநகர் நிர்வாகத்துக்கு உட்பட கருப்பாயூரணி காவல் நிலையம் இருப்பதால் குழப்பம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நீண்ட நாளாக வாடகை கட்டிடத்தில் இயங்கிய கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு கடந்த 2008 ல் பாண்டிகோயில் அருகே சொந்த கட்டிடம் கட்டப்பட்டது. சில ஆண்டுக்கு முன், மதுரை நகர் காவல் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், கூடல் புதூர் காவல் நகருக்குள் இணைக்கப்பட்டது.

எல்லை விரிவாக்கத்தால் கருப்பாயூரணி காவல் நிலைய கட்டிடம் நகருக்குள் வந்தது. பாண்டிகோயில் சந்திப்பை தாண்டி, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அப்பர் மேல் நிலைப்பள்ளி வரை அண்ணாநகர் காவல் எல்லை இருக்கிறது.

விரிவாக்க பகுதியில் ஏதேனும் விபத்து, குற்றச் செயல்கள், குடும்ப பிரச்னைகள் நடந்தால் அவசர கதியில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்வோருக்கு கருப்பாயூரணி காவல் நிலையமே முதலில் ஞாபகத்துக்கு வருகிறது.

அங்கு சென்ற பிறகே முகவரியை பார்த்து, சுமார் 2 கி.மீ., தூரத்தில் கேகே.நகர் ஆர்ச் அருகிலுள்ள அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். விவரம் தெரியாதவர்கள் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு சென்று, அலைவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்து ஜெயசிங் என்பவர் கூறியது: ஏற்கனவே கருப்பாயூரணி காவல் நிலையம் நகர் எல்லையான அண்ணாநகரில் இருந்தது. எல்லை குளறுபடி காரணமாகவே மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக வண்டியூர் கண்மாயின் கிழக்கு பகுதியில் சொந்தக் கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது.

நகர் காவல்துறையின் எல்லை விரிவாக்கத்திற்கு வந்தாலும், தொடர்ந்து கருப்பாயூரணி காவல் நிலையம் அதே கட்டிடத்தில் இயங்கிறது. இது பொதுமக்களுக்கு குழப்பம் உருவாகிறது.

சொந்த கட்டிடமாக இருந்தாலும், குழப்பத்தை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு உட்பட பகுதிகள், தெருக்கள், வாரியான பெயர்கள் அடங்கிய விழிப்புணர்வு விளம்பர போர்டு கருப்பாயூரணி காவல் நிலைய நுழைவு வாயிலில் பாண்டிகோயில் சந்திப்பு பகுதியிலும் வைக்கவேண்டும்.

புறநகர் எல்லைக்குள் கருப்பாயூரணி காவல் நிலையத்தை மாற்றலாம், என்றார்.
இது குறித்து அண்ணாநகர் போலீஸாரிடம் கேட்டபோது, "நகர் எல்லை விரிவாக்கத்தின்போது, இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தெரியாத ஒரு சிலர் குழப்பம் அடையலாம். கருப்பாயூரணி காவல் நிலையத்தை மாற்றுவது நிர்வாகம் தொடர்பான நடவடிக்கை. பாண்டிகோயில் சந்திப்பு உட்பட நகர் காவல் எல்லையில் துண்டு பிரசுரங்கள் விநியோக்க நடவடிக் ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT