தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலை வளாகத்தில் தண்ணீர் சேமிப்புத் தொட்டியில் மூழ்கி இரண்டு கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ம.அந்தோணி (54). பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்தவர் கி.பிச்சாண்டி (24). இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள்.
இவர்கள் இருவரும் முத்தையாபுரம் பகுதியில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைப்பற்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தப் பகுதியில் இருந்த குழாயில் தண்ணீர் வராததால், காலை 10.30 மணியளவில் தொழிற்சாலை வளாகத்தில் தொழிற்சாலை பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த குளம் போன்ற தண்ணீர் சேமிப்பு தொட்டியில் சென்று பிச்சாண்டி தண்ணீர் எடுத்துள்ளார்.
அப்போது அவர் தவறி உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை அறிந்து அந்தோணியும் அங்கே வந்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.
இந்த தண்ணீர் தொட்டி குளம்போல ஆழமாக தோண்டிவைக்கப்பட்டிருந்தது. அடிப்பகுதியில் சகதி அதிகமாக இருந்ததால் தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து நீண்டநேரம் தேடி பகல் 1.30 மணியளவில் இரண்டு தொழிலாளர்களின் சடலங்களையும் மீட்டனர். இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.