கொள்ளை நடந்த வீடு 
க்ரைம்

அருப்புக்கோட்டையில் பூட்டிய வீட்டில் நூதன முறையில் 26 சவரன், ரூ.6.75 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு

மணிகண்டன்

விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்துபவரின் வீட்டில் 26 சவரன், ரூ.6.75 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளைச் சம்பவத்தில் வீட்டின் அருகே கைக்குழந்தையோடு சுற்றித் திரிந்த பெண்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே தோணுகாலைச் சேர்ந்தவர் முருகன். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வரும் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை முருகன் தன் மனைவியுடன் இருக்கன்குடி கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றுள்ளார். வீட்டிலிருந்த அவருடைய மகனை மட்டும் தாங்கள் திரும்பி வரும் வரை பக்கத்து வீட்டில் இருந்து படிக்கும்படி கூறி, வீட்டைப் பூட்டி, சாவியை கதவின் மேல் மறைவாக வைத்துச் சென்றுள்ளார்.

பக்கத்து வீட்டு மாடியில் நின்று படித்துக்கொண்டிருந்த முருகனின் மகன் சிறிது நேரம் கழித்து தற்செயலாக கீழே பார்த்தபோது அவர்கள் வீட்டின் வெளியே கைக்குழந்தையோடு அடையாளம் தெரியாத மூன்று பெண்கள் நின்றிருந்தனர். கீழே சென்ற சிறுவன் ஏன் எங்கள் வீட்டு வாசல் முன் நிற்கிறீர்கள்? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள், தண்ணீர் வேண்டும். அதனால்தான் நின்று கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர். அதை நம்பிய முருகனின் மகனும் வீட்டைத் திறந்து குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளார். தண்ணீரைக் குடித்த பின் அந்தப் பெண்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

கோயிலுக்குச் சென்றிருந்த முருகன் இரவு வீட்டிற்கு வந்த பின், பயணச் செலவு போக மீதியுள்ள பணத்தை பீரோவில் வைப்பதற்காக பீரோ சாவியைத் தேடியுள்ளார். சாவியை வைத்த இடத்தில் இல்லாததைக் கண்டு சந்தேகமடைந்த முருகன், மாற்று சாவியைக்கொண்டு பீரோவைத் திறந்து பார்த்துள்ளார்.

அப்போது, பீரோவில் இருந்த நகை, பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகை மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து உடனடியாக மல்லாங்கினறு போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில் சந்தேதகப்படும் படியாக மூன்று பெண்கள் கைக்குழந்தையோடு பழைய துணி வாங்குவதுபோல் காலையில் இருந்து சுற்றித் திரிந்ததும், முருகன் வீட்டு வாசல் முன் நின்றதும் தெரியவந்தது.

சந்தேகத்துக்குரிய வகையில் திரிந்த அந்தப் பெண்கள்தான் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ''முருகன் வெளியே சென்றதும் வீதியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சாவியை எடுத்துக் கதவைத் திறந்து, முருகன் வீட்டின் உள்ளே நுழைந்து அவர்கள், பீரோ சாவியைத் தேடி எடுத்து பீரோவின் உள்ளே இருந்த 26 சவரன் தங்க நகை மற்றும் ரூ.6.75 லட்சம் பணத்தைத் திருடிவிட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்'' என்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டுப் போனது குறித்து வழக்குப் பதிவு செய்த மல்லாங்கினறு போலீஸார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT