சென்னை
சென்னை அமைந்தகரை பி.பி.தோட்டம் 5-வது குறுக்கு தெருவில் டெல்லியைச் சேர்ந்த காலித், நவுத், பட்லூ, ரீகன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தச்சு வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 4 பேரின் செல்போன்கள், ஏடிஎம் கார்டுகளைத் திருடிச் சென்றுவிட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோதுதான் வீட்டில் திருடுபோனது அவர்களுக்குத் தெரியவந்தது.
ஏடிஎம் கார்டு திருடப்பட்டது குறித்து வங்கிக்கு புகார் கொடுக்கச் சென்றனர். அப்போது காலித் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.16,000-க்கு பொருட்கள் வாங்கப்பட்டு இருப்பதாகவும்,ரூ.1,600-க்கு ஒரு செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும் வங்கி அதிகாரி கள் தெரிவித்தனர்.
ஏடிஎம் கார்டுடன் செல்போனும் திருடப்பட்டதால், அதற்கு வந்த ரகசிய குறியீட்டு எண்ணை (ஓடிபி) வைத்து பொருட்கள் வாங்கியுள்ளனர். இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் 4 பேரும் புகார் செய்தனர். ரீசார்ஜ் செய்யப்பட்ட எண் மற்றும் செல்போன் மூலம் குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.