சென்னை
பெரம்பூர் ரயில்வே காலனியில் ஒரே மாதத்தில் 2 டாக்டர்கள் உட்பட 3 பேரின் வீடுகளில் நகை, பணம் திருடு போனது.
சென்னை ஐசிஎப் ரயில்வே மருத்துவமனையில் இருதயவியல் மூத்த மருத்துவராக இருப்பவர் எஸ்.செந்தில்குமார். இவர் பெரம்பூர் ரயில்வே காலனியில் உள்ள அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார். வீட்டில் இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் மருத்துவமனைக்கு சென்று விட்டு, மாலையில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்து ஐசிஎப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கடந்த ஜுலை 1-ம் தேதி டாக்டர் என்.எம்.குமார் என்பவரின் வீட்டிலும் 70 பவுன் நகை திருடு போனது. இதேபோல அதே காலனியில் உள்ள மற்றொரு மத்திய அரசு அதிகாரி வீட்டிலும் நகை, பணம் திருடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவங்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
தொடர் திருட்டு சம்பவங்கள் நடப்பதால் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘அதிகாரிகள் காலனியில் ஓர் இடத்தில் கூட கண்காணிப்பு கேமரா வைக்கப்படவில்லை. எந்த தடயமும் சிக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.