க்ரைம்

கமுதி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் 

செய்திப்பிரிவு

கமுதி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநில மதுபானங்களை வாங்கி வந்துள்ளனர்.

அவற்றை, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான பார்களில் விற்பனை செய்து வருவதாக, கமுதி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று (புதன்கிழமை) ராமசாமிபட்டிக்கு சென்ற கமுதி போலீஸார் ஒரு வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அவ்வீட்டில் இருந்த லிங்கேஸ்வரன் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

சோதனையில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 704 வெளிமாநில மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, கமுதி மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மதுவிலக்கு போலீஸார் லிங்கேஸ்வரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

-ப.தனபால்

SCROLL FOR NEXT