கரூர்
குளித்தலை அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்வதற்காக, முதலைப்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்த வீரமலை(70), இவரது மகன் நல்லதம்பி(44) ஆகியோர் குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்த னர். இந்நிலையில், குளத்தை அளவீடு செய்தபோது ஆக்கிரமிப் புகளை அடையாளம் காட்டிய அவர்கள், கடந்த ஜூலை 29-ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
குளத்தின் மொத்த அளவு, எவ்வளவு நிலப்பரப்பு ஆக்கிரமிப் பில் உள்ளது, ஆக்கிரமிப்பு இடங்களுக்கு எதன் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது என்பது குறித்து வருவாய் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து, அறிக்கை தாக்கல் செய்வதற்காக முதலைப் பட்டி குளத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது குளித்தலை கோட்டாட்சியர் எம்.லியாகத், வட்டாட்சியர் செந்தில், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
இவ்வழக்கில் தொடர்புடைய முதலைப்பட்டியை சேர்ந்த 6 பேர் மதுரை நீதிமன்றத்திலும், ஒருவர் திருச்சி நீதிமன்றத்திலும் சரணடைந்த நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப் படும் அதே ஊரைச் சேர்ந்த ஜெயகாந்தன்(23) என்பவரை தனிப் படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
குளித்தலை குற்றவியல் நடுவர் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட அவரை, ஆக.16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தர விட்டதை அடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.