சென்னையில் ஹெல்மட் அணியாமல் சென்ற எஸ்.ஐ பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதித்துறையை மோசமாக விமர்சித்து ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட பெண் தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஹெல்மட் கட்டாயம் அணியவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த விதிகளை கடுமையாக பின்பற்ற போலீஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளது. போலீஸார் ஹெல்மட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட அதிகாரிகளுக்கு ஹெல்மட் குறித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றும் எஸ்.மதன்குமார். கடந்த 26-ம் தேதி காலை தெற்கு உஸ்மான் சாலையில் ஹெல்மட் அணியாமல் தனது மோட்டார் சைக்கிளில் சென்றதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மதன்குமார் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. GCTP எனப்படும் போக்குவரத்து காவல்துறை அறிமுகப்படுத்திய செயலியை பயன்படுத்தி உதவி ஆய்வாளர் மதன்குமார் ஹெல்மெட் அணியாததை புகைப்படம் எடுத்து பொதுமக்களில் ஒருவர் அதை போக்குவரத்து காவல்துறைக்கு புகாராக அளித்ததால் நடவடிக்கை வந்தது.
மதன்குமார் தரப்பில் இரண்டு நாள் கழித்து ஆட்டோ ஒன்றை ஸ்டேஷனுக்கு பிடித்து வரும்போது அந்த பதற்றத்தில் ஹெல்மட் அணியாமல் வந்துவிட்டேன் என பதிவிட்டு அதற்கான சிசிடிவி காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டது. இதனிடையே எஸ்.ஐ.மதன்குமார் ஹெல்மட் அணியாமல் சென்றதை ஜட்ஜ் ஒருவரே தனது காரில் போகும்போது பார்த்து படம் எடுத்து அனுப்பியதாக தகவல் பரப்பப்பட்டது.
இதை அடிப்படையாக வைத்து பெண் போலீஸ் போன்று ஒரு பெண் பேசும் ஆடியோ வலைதளங்களில் வைரலானது. அதில் ஹெல்மட் அணியாமல் சென்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐக்கு ஆதரவாக பேசும் அப்பெண், புகைப்படம் எடுத்ததாக தான் நம்பும் ஜட்ஜ் மீது ஆத்திரமூட்டும் வகையில் அவதூறாக பேசி இருந்தார். வக்கீல்கள் போடாமல் போனால் நடவடிக்கை எடுக்கிறீர்களா? என கேட்கிறார்.
யார் வீட்டில் திருடுபோனாலும் போலீஸ்தான் வரணும், இங்க போலீஸுக்கு என்ன செய்துவிட்டார்கள். நாமதான் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம். என்று மோசமாக விமர்சித்திருந்தார். இது வாட்ஸ் அப் வலைதளங்களில் வைரலானது. சில போலீஸ் குரூப்களில் அவரை பெரிதாக பாராட்டியிருந்தனர்.
அவரது பேச்சு ஆடியோ காவல் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றது. பேசியது பெண் போலீஸா அல்லது போலீஸுக்கு நெருக்கடி ஏற்படுத்த யாராவது அப்படி பேசி வெளியிட்டுள்ளார்களா? என ஆய்வு செய்யப்பட்டது. அதில் பேசியவர் ஒரு பெண் தலைமைக்காவலர் என்பது தெரியவந்தது.
சென்னை அஷோக் நகர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் பெர்சியல் அனிதா ஜீவாம்மா என்பது தெரியவந்தது. 1997-ம் ஆண்டு காவற்பணியில் இணைந்த அவர் தற்போது அஷோக்நகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
வாட்ஸ் அப்பில் தவறாக பேசி ஆடியோ வெளியிட்டதன் பேரில், தற்காலிக பணிநீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.