கும்பகோணம்
கும்பகோணம் அருகே திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள 18 பேர் மீது குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசியபுலனாய்வு அமைப்பினர் நேற்று தாக்கல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் ராமலிங்கம்(42). இவர் பாமகவில் திருபுவனம் முன்னாள் நகர செயலாளராக இருந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி இரவு மர்ம நபர்களால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ராமலிங்கத்
தின் மகன் ஷியாம்சுந்தர் கொடுத்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் வலியுறுத்தியதை அடுத்து, இவ்வழக்கு
தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைத் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதி
மன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், முகமது தவ்பிக், முகமது பர்வீஸ், தாவூத் பாட்சா, முகமது இப்ராகிம், காரைக்காலைச் சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ், முகமது பாரூக், மைதீன் அகமது ஷாலி ஆகிய 12 பேர் மீதும், மேலும் இவ்வழக்கில் தேடப்படும் 6 பேர் மீதும் என மொத்தம் 18 பேர் மீது குற்றப் பத்திரிகை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பாளர் ராகுல், கூடுதல் எஸ்பி சவுகத் அலி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழு 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிறப்பு நீதி மன்ற நீதிபதி சவுந்திரபாண்டியனிடம் தாக்கல் செய்தது.