க்ரைம்

மதுரையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் மோதல்: பென்சில் கத்தியால் தாக்கிக் கொண்டவர்களை எச்சரித்து அனுப்பியது போலீஸ்

செய்திப்பிரிவு

மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவரிடையே சாலையில் ஏற்பட்ட மோதல் பென்சில் சீவும் கத்தியுடன் தாக்கிக் கொள்வதில் முடிந்தது.

காயம் லேசானது என்பதாலும் மாணவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு விளக்கத்தூண் போலீஸார் எச்சரித்து பெற்றோர் வசம் ஒப்படைத்து அனுப்பிவைத்தனர்.

கீழவாசல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவர் மதிய உணவு வேளையில் பள்ளிக்கு வெளியே சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது.

ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவர் பையில் வைத்திருந்த பென்சில் சீவும் கத்தியை எடுத்து மற்றொரு மாணவரைத் தாக்கியுள்ளார். இதில் அந்த மாணவருக்கு கையில் சிறுசிறு ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மோதல் முற்றுவதற்குள் அருகிலிருந்தவர்கள் இருவரையும் பிரித்து விளக்கத்தூண் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்கள், மாணவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு இரு மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து அவர்கள் முன்னிலையில் மாணவர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

பள்ளிப் பருவத்தில் இதுபோன்ற மோதல்களில் ஈடுபட்டால் எதிர்காலமே வீணாகிவிடும் என்ற அறிவுரையும் கூறியுள்ளர். பின்னர் இருவரையும் பெற்றோருடன் அனுப்பிவைத்துள்ளனர்.

அண்மையில் கொடைக்கானல் பகுதியில் மாணவர் ஒருவர் சக மாணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்தார். கல்லூரி மாணவர்கள் மத்தியிலேயே நிலவிவந்த வன்முறை மோதல்கள் தற்போது பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பெருகிவருகிறது. பள்ளிகளில் கல்வியுடன் நல்லொழுக்கமும் போதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 

SCROLL FOR NEXT