நாமக்கல்
சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற பெண் செவிலியர், அவரது கணவர் உள்பட 7 பேருக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ராசிபுரத்தில் சட்டவிரோதமாக பச்சிளங் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதுதொடர்பாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (50), அவரது கணவர் ரவிச்சந்திரன், சகோதரர் நந்தக்குமார், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், சேலத்தைச் சேர்ந்த பெண் செவிலியர் உதவியாளர் சாந்தி (48), பெங்களூரு அழகுக்கலை நிபுணரான இடைத்தரகர் ரேகா என 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதான 11 பேரின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சேலம் சிபிசிஐடி போலீஸார் 11 பேரையும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைதரகர்கள் லீலா, அருள்சாமி, செல்வி, ஹசினா ஆகிய 7 பேரும் மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி, 7 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாந்தி, நந்தக்குமார், பர்வீன், ரேகா ஆகிய 4 பேரின் நீதிமன்றக் காவலை 14-ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.