க்ரைம்

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்: 10 மாத குழந்தையை கடத்தி கொலை செய்த தாத்தா கைது

செய்திப்பிரிவு

குடும்பத் தகராறில் பேத்தியைக் கடத்திச் சென்று கொலை செய்த தாத்தாவை போலீஸார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த செல்வ ராஜ் (45) மகன் குமார் (24). இவரது மனைவி முத்து மாலை (24). தம்பதிக்கு தர்ஷினி என்ற 10 மாத குழந்தை இருந்தது. செல்வராஜின் இரண்டாவது மனைவி சக்திகனி (35) குடும்பத் தகராறு காரணமாக அவரைப் பிரிந்து, திருச்செந்தூரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.

 தன்னுடன் சேர்ந்து வாழ சக்திகனியை செல்வ ராஜ் அழைத்தும் அவர் வர மறுத்துள்ளார். குமாரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற செல்வராஜ், தனது மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதற்கு நீங்கள்தான் காரணம் எனக்கூறி, மருமகள் முத்துமாலையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் மனைவியை தன்னோடு சேர்த்து வைத்துவிட்டு, குழந்தையை பெற்றுச் செல்லுமாறு கூறி, முத்துமாலையிடம் இருந்த பேத்தியை செல்வராஜ் பறித்துச் சென்றுள்ளார். புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸார், குழந்தையை கடத்திச் சென்றதாக செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான தனிப்படையினர், அவரைத் தேடி வந்த நிலையில் கிணத்துக்கடவு ரயில்நிலையம் பகுதியில் சுற்றி திரிந்த செல்வராஜை நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தொப்பம்பாளையத்தில் இருந்து ஒத்தக்கால்மண்டபம் செல்லும் வழியில் குழந்தையைக் கொலை செய்து, அங்குள்ள ஒரு புதரில் மறைத்து வைத்திருப்பதாக, போலீஸாரிடம் செல்வராஜ் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ரத்த காயங்களுடன் கிடந்த தர்ஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT