நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ம் தேதி அவர்கள் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். நெல்லையை உலுக்கிய இந்தக் கொலைச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தல் கொலையில் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். சில அரசியல் பிரமுகர்கள் மீதும், கூலிப்படையினர் மீதும் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. போலீஸார் தொடர்ந்து தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஏதாவது உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
அப்பகுதியில் பரோட்டா கடை ஒன்றிலும், சர்ச் ஒன்றிலும் மட்டுமே சிசிடிவிக்கள் இருந்தன. அதை ஆய்வு செய்தபோது கார் ஒன்று இரண்டு மூன்று நாட்களாக அப்பகுதியில் சுற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் கார் எண்ணை எடுத்துள்ளனர். அதேபோன்று செல்போன் எண் ஒன்றும் சம்பவ நேரம் மற்றும் அதன்பின்னர் கிடைத்ததை வைத்து போலீஸார் சிலரைப் பிடித்தனர்.
மேலும் கொலை நடந்த அன்று மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்ட நிலையில் தாங்கள் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை, தாங்கள் தமிழக போலீஸாரிடமிருந்து வழக்கு விவரங்களைப் பெற்றபின், அவர்கள் நடத்திய விசாரணையின் தகவல்களையும் சேகரித்துக்கொண்டு எங்கள் அதிகாரிகள் விசாரணையில் இறங்குவார்கள் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.