க்ரைம்

விழுப்புரத்தில் போலி கான்ஸ்டபிள் கைது

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட புறக்காவல் நிலைய தலைமைக் காவலர் ஜோசப் தலைமையிலான போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு, விழுப்புரம் ஆயுதப்படையில் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரிடம்  அடையாள அட்டையைக் காட்டுமாறு போலீஸார் கேட்டுப் பெற்றனர்.

அந்த அடையாள அட்டை போலியானது எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் விழுப்புரம் அருகே கடையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மகன் படையப்பா என்கிற சிவா என்பதும், பிஎஸ்சி வேதியியல் படித்த இவர் வேலை கிடைக்காததால் தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு சுற்றியுள்ளதும் தெரியவந்தது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமைக் காவலர் ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா உதவி காவல் ஆய்வாளர் பிரகாஷ் 4 பிரிவுகளின் கீழ் படையப்பா என்கிற சிவா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிவா நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

SCROLL FOR NEXT