சிசிடிவி காட்சி 
க்ரைம்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: சிசிடிவி காட்சியில் சிக்கிய பேக்கரிக் கடை உரிமையாளர் கைது

சீனிவாசன்

சேலம்

சேலம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த, பேக்கரி கடை உரிமையாளர் சிசிடிவி காட்சி மூலம் பிடிபட்டார்.

சேலம் கிச்சிப்பாளையம் அருகே திருமலை நகர் பகுதியில் கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த வங்கியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2.45 மணிக்கு  இளைஞர் ஒருவர் புகுந்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

அந்நபர் ஏடிஎம் மையத்தில் புகுந்து பணம் எடுப்பதும் கொள்ளை அடிக்க முயற்சி செய்வதும் சிசிடிவி கேமரா மூலம் கரூர் வைஸ்யா வங்கியின் மும்பை அலுவலகத்திற்கு தெரிந்துள்ளது. உடனே மும்பையில் இருந்து வங்கி அதிகாரிகள் சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு ஏடிஎம் மையத்தில்  கொள்ளை அடிப்பது குறித்து தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் அங்கு செல்வதற்குள் அந்த இளைஞர் ஏடிஎம் மையத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் தப்பியது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த பதிவுகளை வைத்து  அந்த நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீஸார் சிசிடிவி காட்சிகள் மூலம் நடத்திய விசாரணையில் அந்த நபர், சேலம் டவுன் கிச்சிப்பாளையம் பாத்திமாநகர் பகுதியை சேர்ந்த பேக்கரிக் கடை நடத்தி வரும் இப்ராஹிம் (46) என தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

அவரிடம் நடத்திய விசாரணையில் ஏடிஎம்மில் பணம் போட்டபோது மிஷினில் பணம் மாட்டிக் கொண்டதால், சிக்கிக்கொண்ட பணத்தை எடுப்பதற்காக ஏடிஎம்  இயந்திரத்தை உடைத்தேன் என போலீஸாரிடம்  தெரிவித்துள்ளார். 

SCROLL FOR NEXT