சேலம்
சேலத்தில் நள்ளிரவில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், கிச்சிப்பாளையம் அருகே திருமலை நகர் பகுதியில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 2.45 மணிக்கு ஒரு இளைஞர் புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஏடிஎம் மையத்தில் ஒரு நபர் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்வது சிசிடிவி கேமரா மூலம் கரூர் வைஸ்யா வங்கியின் மும்பை அலுவலகத்திற்குத் தெரிந்துள்ளது.
உடனே மும்பையில் இருந்து வங்கி அதிகாரிகள் சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு ஏடிஎம் மையத்தில் ஒரு நபர் புகுந்து கொள்ளையடிக்க முயற்சிப்பது குறித்து தகவல் தெரிவித்தனர். உடனே கிச்சிப்பாளையம் போலீஸார் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த இளைஞர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தகவலறிந்த, சேலம் மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை மற்றும் சேலம் டவுன் உதவி கமிஷனர் ஈஸ்வரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஏடிஎம் மையத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து ஏடிஎம் மையத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் அழைத்து வரப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அந்த இளைஞர் சாமர்த்தியமாக ரேகை சிக்காத வண்ணம் கொள்ளையடிக்க முயற்சி செய்ததால் கைரேகை எதுவும் பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும், அந்த இளைஞர் ஏடிஎம் மையத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது. நள்ளிரவில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த கொள்ளை முயற்சியில் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிந்துள்ள இளைஞர் உருவத்தை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.