க்ரைம்

அயனாவரம் ஏடிஎம் சென்டரில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய 3 பேர் கைது: போலீஸார் பிடிப்பதற்குள் 10 லட்சம் திருட்டு: ஆடி சொகுசு கார் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை அயனாவரம் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி வாடிக்கையாளர் பணத்தை திருட முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸார் விசாரணை நடக்கும்போதே ரூ. 10 லட்சம் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. 

கடந்த 16-ம் தேதி, அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற  கோபிகிருஷ்ணன்  என்பவர்  ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார். உடனடியாக போலீஸுக்கு அவர் தகவல் அளித்தார்.

ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனத்தை சார்ந்த ஊழியர்களும் வங்கி அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து ஸ்கிம்மர் கருவி மற்றும் பின் நம்பரை கண்டறிய பயன்படுத்திய சிசிடிவி. கருவி ஆகியவற்றை கண்டறிந்தனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்யபட்டு மத்திய குற்ற பிரிவினருக்கு மாற்றப்பட்டது. 

ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த மத்திய குற்ற பிரிவு போலீஸார், சிசிடிவி காட்சியில் 4 பேர் குற்றச்சம்பவத்தில்  ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஏடிஎம்மில் அமைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சந்தேகமாக உள்ள இருவரின் நடமாட்டத்தை  அடுத்தடுத்த இடங்களில் இருந்த பல சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

இருவரும் திருவள்ளூர் வரை சென்ற காட்சிகள் சிக்கியது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இதேப்போன்று  ஏடிஎம் கார்டுகளில் இருந்து பணம் திருடப்படுவதாக போலீஸாருக்கு புகார்கள் குவிந்தன. குறிப்பாக பணம் பறிகொடுத்தவர்கள் கவரப்பேட்டையில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்மில் கார்டுகளை பயன்படுத்திய பின்னரே பணம் பறிபோனது தெரியவந்தது.

கவரப்பேட்டையில் உள்ள  அந்த ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அயனாவரத்தில் சந்தேகத்துக்கிடமாக போலீஸார் பின் தொடர்ந்த அதே நபர்கள் என தெரியவந்தது. திருவள்ளூரிலும் அதே நபர்கள் அதேமுறையில் ஸ்கிம்மர், சிசிடிவி பொருத்தி கார்டு எண்களை எடுத்து பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.

அயனாவரம் மற்றும் கவரப்பேட்டையில் குறிப்பிட்ட ஏடிஎம்கள் அருகே பயன்படுத்திய செல்போன் சிக்னல்கள் வைத்து கொள்ளையர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இதில் ஏடிஎம்களில் அடித்த பணத்துடன் வெளிமாநிலம் தப்பிச்செல்ல முயன்ற 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஏடிஎம்களில் அடித்த பணத்தில் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்த அவர்கள் சிக்கியதும் போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்கள் பெயர் அல்லாபக்‌ஷ், அப்துல் ஹாதி, இர்பான் என தெரியவந்தது. மூவரும் ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர்கள். 3 பேரைத் தவிர  4- வது நபர்   தப்பிவிட்டார்.

பிடிபட்ட அனைவரும்  காவலாளிகள் இல்லாத ஏடிஎம்களை குறிவைத்து, ஸ்கிம்மர் கருவியை பொருத்தி கொள்ளையடித்ததும் தெரிய வந்துள்ளது. அயனாவரத்தில் ஸ்கிம்மர் கருவியை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தும் நேரத்தில் திருவள்ளூர் உள்ளிட்ட பல இடங்களில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் ஏராளமான ஏடிஎம் கார்டுகள், பல்வேறு வாடிக்கையாளர்களின் டேட்டா உள்ளிட்ட தகவல்களை போலீஸார் கைப்பற்றினர்.  அவர்களிடமிருந்து ரூ.85 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றையும் போலீஸார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட கும்பல் எந்தெந்த இடங்களில் ஸ்கிம்மர் பொருத்தப்பட்டு கொள்ளையடித்தார்கள்,இந்த கும்பலுக்கு யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.  தப்பி ஓடிய கூட்டாளியிடம் பல வங்கி வாடிக்கையாளர்களின் கார்டு தகவல் இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த நபரை பிடிக்க போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
 

SCROLL FOR NEXT