க்ரைம்

அமைந்தக்கரையில் 3 வயது குழந்தையை கடத்தி  ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டல்: நாடகமாடிய பணிப்பெண் காதலனுடன் கைது: போலீஸாரின் 6 மணி நேர அதிரடி மீட்பு 

செய்திப்பிரிவு

சென்னை அமைந்தக்கரையில் பள்ளிக்குச் சென்ற  எல்.கே.ஜி மாணவியை பணிப்பெண்ணுடன் மர்ம நபர்கள் கடத்திச் சென்று ரூ.60 லட்சம் கேட்டு மிரட்டினர். போலீஸாரின் 6 மணி நேர அதிரடி மீட்பு ஆக்‌ஷனில் நாடகமாடிய பணிப்பெண், காதலனுடன் சிக்கினார்.

சென்னை அமைந்தகரை, செனாய் நகர், செல்லம்மாள் தெருவில் வசிப்பவர்  அருள்ராஜ். இவரது மனைவி நந்தினி. இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3.5 வயதில் பெண்குழந்தை உள்ளது.  சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறது. 

குழந்தையை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, பின் மதியம் அழைத்து வருவதற்கு அம்பிகா(29)என்ற பெண் பணியாளரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். 

நேற்று வழக்கம்போல் பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வரச்சென்ற பணிப்பெண்  அம்பிகா குழந்தையுடன் டாடா சுமோ காரில் கடத்தப்பட்டார். 

குழந்தையையும், வேலைக்காரப் பெண்ணையும் காணவில்லை என பதைபதைத்து டாக்டர் நந்தினி  தேடிய நிலையில் பணிப்பெண்  செல்போனிலிருந்து நந்தினியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

 பள்ளியிலிருந்து குழந்தை ஏன் வீட்டுக்கு வரவில்லை, குழந்தை எங்கே என அவர் கேட்டபோது, தன்னையும் குழந்தையையும் யாரோ கடத்திவிட்டனர், எங்களை காப்பாற்றுங்கள் என அம்பிகா அழுதுள்ளார். உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

பின்னர் சிறிது நேரம் கழித்து அதே எண்ணில் நந்தியின் செல்போனில் தொடர்புக்கொண்ட ஆண்குரல் ஒன்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளது. உங்கள் குழந்தையையும், வேலைக்காரியையும்  கடத்தியுள்ளோம். குழந்தை, வேலைக்காரி உயிருடன் திரும்ப வேண்டுமானால் ரூ.60 லட்சம் தரவேண்டும் என மிரட்டியுள்ளனர்.

 போலீஸுக்கு போகக்கூடாது, அடுத்து நாங்களே அழைப்போம் என கூறி தொடர்பை துண்டித்துள்ளனர். 

இதனால் பயந்துப்போன நந்தினி தனது கணவரை அழைத்து விபரத்தை கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். முதலில் பெற்றோரை சமாதானப்படுத்திய போலீஸார் போன் நெம்பரை ட்ரேஸ் செய்ய துவங்கியுள்ளனர். 

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக ஆபரேஷனை கண்காணிக்க, அண்ணா நகர் துணை ஆணையர் முத்துசாமி, உதவி ஆணையர் குணசேகரன் தலைமையில் தனிப்படை தயாரானது. குழந்தைக் கடத்தலில் பணிப்பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது அவரையும் சேர்த்து கடத்தியுள்ளார்களா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். 

பின்னர் பணிப்பெண் அம்பிகாவின் எண்ணிலிருந்து மர்ம நபர் திரும்ப திரும்ப லைனில் வந்து பணத்தை ரெடிபண்ணியாச்சா? எனக்கேட்டு மிரட்டியபடி இருந்தார். போலீஸார் அந்த எண்ணை ட்ரேஸ் செய்தபோது அது செங்குன்றம், பாலவாயல் பகுதியை காட்டியது.  உடனடியாக அங்குச் சென்ற தனிப்படை போலீஸார் அங்கிருந்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் பெயர் முகமது கலிமுல்லா சேக் என்பதும் புழலில் உள்ள பிரபல வெளிநாட்டு சிக்கன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுவதும் தெரிய வந்தது. விசாரணையில் குழந்தையைக் கடத்தியது அவர்தான்  என்பதும், போன் செய்து மிரட்டியதும் அவர்தான் என்பதும் தெரிந்தது. பணிப்பெண் அம்பிகாவின் காதலரான முகமது கலிமுல்லாவுக்கு குழந்தையைக் கடத்த திட்டம் போட்டுக்கொடுத்தது காதலி அம்பிகா என தெரிய வந்தது. 

அம்பிகா பணிப்பெண்ணாக டாக்டர் நந்தினி வீட்டில் சேர்ந்ததும் அவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதை அறிந்துக்கொண்டார். குழந்தைமேல் அவர்கள் பாசத்தை பொழிவதை கண்ட அம்பிகா, குழந்தையைக் கடத்தினால் பெரிய தொகையை கறக்கலாம் என கலிமுல்லாவிடம் கூறியுள்ளார். பின்னர் கலிமுல்லாவும் அவரது கூட்டாளிகள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கடத்தலை அரங்கேற்றியுள்ளனர்.

சந்தேகம் வராமலிருக்க அம்பிகா தன்னையும் அவர்கள் கடத்தியதாக நாடகம் ஆடியுள்ளார். குழந்தையைக் கடத்தியதும், அம்பிகாவை குழந்தையுடன் கோவளத்தில் ஒரு லாட்ஜில் தங்கவைத்துவிட்டு அங்கிருந்து முதலில் டாக்டர்.நந்தினிக்கு அம்பிகாவை வைத்து பேசச்சொல்லிவிட்டு, பின்னர் நெற்குன்றத்துக்கு திரும்பிய கலிமுல்லா அங்கிருந்தே பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

போலீஸார் கலிமுல்லா கூறிய தகவலை கேட்டவுடன் உடனடியாக கோவளம் போலீஸாருக்கு தகவல் சொல்லி குழந்தையை மீட்டனர். பின்னர் அங்குச் சென்ற தனிப்படை அம்பிகாவை கைது செய்தது. போலீஸ் வருவதை அறிந்த கூட்டாளிகள் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

 குழந்தையை மீட்ட போலீஸார் உடனடியாக சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இவை அத்தனை ஆபரேஷனும் 6 மணி நேரத்தில் முடிந்தது. குழந்தை கிடைத்ததில் பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சி.  பத்திரமாக மீட்டதால் போலீஸாருக்கு நிம்மதி.

கடத்தலில் ஈடுபட்ட முகமது கலிமுல்லா சேக், வேலைக்கார பெண் அம்பிகா ஆகியோரை அமைந்தகரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்டேஷனில் காத்திருந்த காவல் ஆணையர்

குழந்தையை மீட்கும் ஒவ்வொரு அசைவையும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக கண்காணித்தார். கடத்தல் தகவல் கிடைத்த சில மணி நேரங்களில் அண்ணா நகர் காவல் நிலையம் வந்த அவர், குழந்தையை மீட்டு ஸ்டேஷன் அழைத்து வரும்வரை ஸ்டேஷனிலேயே காத்திருந்து பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

இதேப்போன்று கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் கீர்த்திவாசன் என்ற சிறுவன் கடத்தப்பட்டு ரூ.1 கோடி பணயத்தொகை கேட்டனர். 

முதலில் பணையத்தொகையைக் கொடுக்கச்சொல்லி சிறுவனை மீட்ட போலீஸார் பின்னர் கடத்தல் நபர்களை பிடித்தனர். இரண்டு இன்ஜினியரிங் பட்டதாரிகள் சிக்கினர். அதேப்போன்று அண்ணா நகர் பகுதியில் குழந்தை கடத்தப்பட்டு உடனடியாக மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT