க்ரைம்

கழிவு நீர்தொட்டி அமைக்க பள்ளம் தோண்டியபோது விபத்து: மண்சரிவில் சிக்கி தொழிலாளி பலி: மற்றொருவர் காயத்துடன் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை நீலாங்கரையில் கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலியானார், மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை அருகே பெரிய நீலாங்கரை குப்பம் பகுதியில் வசிப்பவர் பலராமன். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டும் பணி நேற்று நடந்தது.

இந்தப்பணிக்காக அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை, முருகன், ஏழுமலை, ரமேஷ் ஆகிய 4 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டிருந்த நிலையில் திடீரென மண் சரிந்து அனைவரையும் மூடியது. 10 அடி ஆழத்தில் அனைவரும் மண்ணுக்குள் சிக்கி மூச்சுவிட முடியாமல் போராடினர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழிக்குள் இறங்கி ஓரளவு மண்மூடாத பகுதியில் சிக்கிய அண்ணாமலை, முருகன் ஆகியோரை மீட்டனர். மண்மூடி உள்ளே சிக்கியிருந்த   ஏழுமலை, ரமேஷ் ஆகியோரை மீட்கும் பணி நடந்தது. ஆனால் அதற்கு நேரம் குறைவாகவே இருந்தது. ஆகவே தீயணைப்புத்துறைக்கும் போலீஸாருக்கும் பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

உடனடியாக நீலாங்கரை போலீஸார் மற்றும் திருவான்மியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட தீயணைப்பு அதிகாரி சையது அகமது நேரில் வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். குழிக்குள் சிக்கியிருந்த ஏழுமலையை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால்  ரமேஷ் மண்ணுக்கு அடியில் சிக்கி விட்டதாலும், வெகு நேரமாக மீட்க முடியாமல் மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாலும் பெரிய போராட்டத்துக்குப் பின்னரே அவரை மீட்டனர். ரமேஷை மீட்டு ஆபத்தான நிலையில்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக  உயிரிழந்தார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர்த் தொட்டி அமைக்கும் பணியில் உறை பதிக்கும் போது திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவரில் ஒருவரை உயிருடனும், ஒருவரை சடலமாகவும் மீட்டெடுத்தது அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT