சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 வயதுக் குழந்தையைக் கடத்திய நபர் போலீஸாரின் சிசிடிவி காட்சியில் சிக்கியதால் பயந்துபோய் குழந்தையைத் திருப்போரூரில் உள்ள ஒரு சாலையில் விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
நேற்று முன் தினம் அதிகாலையில் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒடிசா செல்ல தங்கியிருந்த ஒடிசாவைச் சேர்ந்த ராம்சிங் நீலாவதி தம்பதியினரின் 3 வயது ஆண் குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்டது.
குழந்தை காணாமல் போனதாக அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் குழந்தையை ரயில் நிலையத்தில் இருந்து தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகின.
அடையாளம் தெரியாத அவரைப் பிடிக்க வலை விரித்ததில் அவர் குழந்தையோடு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் காட்சிகளும் சிக்கின. இதனையடுத்து குழந்தையைக் கடத்திச் சென்றவர் யார்? எதற்காக அவர் குழந்தையைக் கடத்தினார்? என தமிழ்நாடு ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அவர் குழந்தையைக் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின. இதனால் பயந்துபோன அந்த நபர் குழந்தையுடன் தான் இருந்தால் பொதுமக்களால் பிடிக்கப்படுவோம் என பயந்துபோய் திருப்போரூர் பேருந்து நிலைய சாலையில் குழந்தையைக் கீழே இறக்கி விட்டு நைசாக நழுவி விட்டார்.
தனியே நின்ற குழந்தையைப் பார்த்த அங்குள்ள பொதுமக்கள் மீட்டு ரோந்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் திருப்போரூரில் உள்ள மவுண்ட் உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தை செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
தற்போது குழந்தையை மீட்க ரயில்வே போலீஸார் செங்கல்பட்டு விரைந்துள்ளனர். குழந்தையைப் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற கடத்தல் நபரைப் பிடிக்கவும் போலீஸார் முயற்சி எடுத்து வருகின்றனர்.
குழந்தை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களது பெற்றோரின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டபின் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.