சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரின் 3 வயது ஆண் குழந்தையைக் கடத்திய மர்ம நபர் தாம்பரம் ரயில் நிலையத்தில் குழந்தையுடன் வெளியேறும் சிசிடிவி காட்சி சிக்கியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்தவர் ராம்சிங் (34). இவரது மனைவி நீலாவதி (29). ஒடிசாவுக்குச் செல்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் காலையில் ரயில் என்பதால் ரயில் நிலையத்தில் தங்கள் 3 வயது மகனுடன் உறங்கினர். காலையில் கண் விழித்துப் பார்த்த தம்பதிகள் தங்கள் மகன் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ரயில்வே போலீஸில் புகார் அளித்தனர். உடனடியாக ஸ்டேஷனில் ஆய்வு நடத்திய சென்ட்ரல் ரயில்வே போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது குழந்தையை ஒரு நபர் தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது.
கையில் சிவப்பு நிறப் பையுடன், நீல நிறக் கட்டம்போட்ட சட்டை அணிந்திருந்த நபர், குழந்தை தனியாக சுற்றுவதைப் பார்த்து அங்கும் இங்கும் நோட்டமிட்டு பின்னர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியேறுவது தெரிந்தது.
போலீஸார் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு ரயில்வே போலீஸ் குழுவை அனுப்பி வைத்தனர். ரயில் சென்ற அருகாமை ரயில் நிலையங்களுக்கும் சிசிடிவி காட்சிகளை அனுப்பி உஷார்படுத்தினர்.
இந்நிலையில் அந்த நபர் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சிகள் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறிய அந்த நபர் நேராக பூந்தமல்லி நெடுஞ்சாலையைக் கடந்து பூங்கா நகர் ரயில் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து ரயில் மூலம் தாம்பரத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்து அவர் குழந்தையுடன் வெளியேறும் காட்சிகள் பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகின. வட மாநில நபர் போல் தோற்றமளிக்கும் அவரை[ பற்றி தாம்பரம் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டு வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்களில் எங்காவது பதிவாகியுள்ளாரா என போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த நபர் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் எங்கேனும் வசிக்கலாம் என்பதால் விரைவில் பிடிபட வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.