திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலத்தைச் சேர்ந்த ஐயப்பன் (18), ராஜவேல்(20), பிரதீப் (21) ஆகிய மூவரும் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், தலையாமங்கலம் காவல் நிலையத்தில் 3 பேரும் நேற்று கையெழுத்திடச் சென்றுள்ளனர். அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் 3 பேரையும் காவல் நிலைய வளாகத்தில் சீமைக் கருவேலமரங்களை வெட்டி அகற்றுமாறுகூறி, அவர்களிடம் அரிவாளை கொடுத்துள்ளார்.
அப்போது, அந்த மூவரும், காவல் நிலையத்தில் இருந்து அரிவாளுடன் வருவதுபோலவும், வாயிலில் கையில் அரிவாள், கத்தியுடன் நின்றுகொண்டு டிக்டாக் செயலி மூலம் டப்பிங் செய்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இதையறிந்த போலீஸார், மூவரையும் நேற்று மாலை கைது செய்து, மன்னார்குடி குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.