முதலீடு தொகைக்கு அதிக முதிர்வுத் தொகை தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான நபர், முதலீட்டாளர்களை, விமானத்தில் அழைத்துச் சென்று கவர்ந்து நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந் துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் சுகுமார். முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப, அதிக முதிர்வுத்தொகை தருவதாக கூறி ரூ.1.25 கோடி வசூலித்து மோசடி செய்ததாக சுகுமார் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் பி.கே.புதூரை சேர்ந்த செந்தில்குமார்(49) என்பவரை மாநகர குற்றப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணை யில், சிட்கோவில் லேத் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வரும் இவர், ஏராளமானோரிடம் ரூ.5.75 கோடி வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மாநகர குற்றப்பிரிவு போலீஸார் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த மோசடியில் செந்தில்குமார் ஈடுபட்டுள்ளார்.
ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பங்குச்சந்தையில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், நான்கு வருடங்களில் ரூ.ஒரு கோடி முதிர்வுத் தொகை கிடைக்கும் எனத்தெரிவித்துள்ளார். இதை நம்பி சிலர் ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் என முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு ஜெர்மன் நாட்டின் நிறுவனம் அளித்ததை போல், ஆவணங்களை அளித்துள்ளார்.
‘ஜெர்மன் நிறுவனத்தின் சார்பில், டெல்லியில் ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க வேண்டும்’ என மூன்று மாதங் களுக்கு ஒருமுறை முதலீட்டாளர் களை கோவையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து, ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என கூறி, அவர்களை அருகேயுள்ள சிம்லா, காஷ்மீர் போன்ற சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று விட்டு, கோவைக்கு அழைத்து வந்து விடுவார். சிலசமயம் கோவையில் இருந்து டெல்லி செல்ல 60-க்கும் மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்து விடுவார். பின்னர், கூட்டம் ரத்தாகிவிட்டது என முதலீட்டாளர்களிடம் கூறி விமான டிக்கெட்டை ரத்து செய்து விடுவார். ஆடம்பர செலவுகளை பார்த்து செந்தில்குமார் கூறிய தை உண்மை என நம்பிய முதலீட்டாளர்கள், தங்களுக்கு தெரிந்தவர்களையும் இவரிடம் முதலீடு செய்ய வைத்துள்ளனர். டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் முதலீட்டாளர்களை நாள் கணக்கில் தங்க வைத்ததற்கு ரூ.6 கோடி வரை கட்டணம் வந்துள்ளது. இதில் சில லட்சம் தொகையை கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகைக்கு காசோ லையை அளித்துள்ளார். அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியது தொடர்பாகவும் ஓட்டல் நிர்வாகத்தினர் செந்தில்குமார் மீது புகார் அளித்துள்ளனர். இவ்வாறு போலீஸார் கூறினார்.