வழக்கறிஞர் மோனிகா, நமீதா
சென்னை: இளைஞரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை சூளைமேடு, தமிழ் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன்(32). மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றி வரும் இவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆடி மாதத்தை முன்னிட்டு இவரது மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சுதர்சன் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் நமீதா (22) என்ற பெண்ணிடம், அவரைக் காதலிப்பதாக சுதர்சன் கூறியதாகத் தெரிகிறது. இதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்ட நமீதா, அதே பகுதியில் வசிக்கும் தனது தோழியும் வழக்கறிஞருமான மோனிகாவிடம் (32) இது குறித்து தெரிவித்துள்ளார்.
அப்போது, 'இதை வைத்து சுதர்சனை மிரட்டி பணம் பறிக்கலாம்' என வழக்கறிஞர் மோனிகா திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளார். அதன்படி, கடந்த மாதம் 27-ம் தேதி நமீதா ஆசை வார்த்தைகூறி சுதர்சனை தனது தோழி வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு மோனிகா, அவரது கணவர் பாலகிருஷ்ணன், அவரது நண்பர் கணேஷ், நமீதா, சிவரஞ்சனி உள்ளிட்ட சிலர் சுதர்சனை சூழ்ந்துகொண்டு, "நீ நமீதாவைக் காதலிக்கிறாய். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. இதை உன் மனைவியிடமோ அல்லது போலீஸிடமோ சொல்லி உன்னை சிறைக்கு அனுப்பிவிடுவோம். இந்த விவகாரத்தை வெளியே சொல்லாமல் இருக்க ரூ.5 லட்சம் தர வேண்டும்” என மிரட்டினர்.
மிரட்டல் தொடர்ந்து வந்ததால், மனமுடைந்த சுதர்சன், நடந்தவற்றைத் தனது மனைவியிடம் கூறியுள்ளார். அவரது ஆலோசனையின்படி, இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி சுதர்சனை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நமீதா, வழக்கறிஞர் மோனிகா, அவரது கணவர் பாலகிருஷ்ணன், நண்பர் கணேஷ் மற்றும் சிவரஞ்சனி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.