க்ரைம்

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 4 கிலோ தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடல் வழியாக தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து 4 கிலோ 435 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இலங்கையிலுள்ள தலைமன்னார் கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அந்நாட்டு கடற்படையினர், நடுக்கடலில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஃபைபர் படகை நிறுத்தி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் படகில் மணல் மூட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 410 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து, படகிலிருந்து இரண்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

மேலும், செவ்வாய்கிழமை இரவு புத்தளம், உச்சிமுனை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மற்றொரு தேடுதல் நடவடிக்கைகையின் போது, ​சந்தேகத்துக்கிடமான ஒரு ஃபைபர் படகு இடைமறிக்கப்பட்டு, டீசல் கேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ 25 கிராம் தங்கத்துடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தையும், தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகுகள், கைது செய்யப்பட்ட நால்வரையும் மேல் நடவடிக்கைக்காக அந்நாட்டு சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்த முயன்றபோது இலங்கை கடற்படையினரிடம் பிடிபட்டுள்ளனர் எனவும், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த தங்கக் கடத்தலுக்கு பின்னால் தமிழகம் மற்றும் இலங்கையைச் சார்ந்தோர் யார் உள்ளனர் என அந்நாட்டு கடற்படையினரும், சுங்கத் துறையினரும் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ 5 கோடியே 50 லட்சம் ஆகும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT