ஆவடி விமானப்படை நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற விமான படை பணிக்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா இளைஞர்கள் தீபக், அனில், சவான், கவுரவ்.
ஆவடி: ஆவடி விமானப் படை நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற விமானப் படை பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம், மின்னணு சாதனங்கள் மூலம் முறைகேடு செய்ய முயற்சித்ததாக ஹரியானா இளைஞர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள விமானப்படை நிலையத்தில், விமானப் படையில் காலியாக உள்ள எழுத்தர், வாகன ஓட்டுநர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், தமிழகம் மட்டுமின்றி, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது, தேர்வு மைய பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளுக்கு, தேர்வு எழுத வந்த இளைஞர்கள் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களிடம் விமானப் படை அதிகாரிகள் தீவிர சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில், ஹரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த கவுரவ் (21) என்பவர், அமன் குமார் என்பவருக்குப் பதிலாகவும், அனில் (27) என்பவர், சுனில் என்பவருக்கு பதிலாகவும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்றதும், அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் போலியானவை என்பதும் தெரிய வந்தது.
மேலும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சவான் (25), தீபக் (24) ஆகியோர் தேர்வில் சட்டவிரோத தகவல் பரிமாற்றம் செய்ய ஜிஎஸ்எம் டிரான்ஸ்மிட்டர் பாக்ஸ் (GSM Transmitter Box) என்ற தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்தி, தேர்வு எழுதி முறைகேடு செய்ய முயற்சித்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்தது.
இதுகுறித்து, ஆவடி விமானப் படை அதிகாரி சத்யேந்திரகுமார் அளித்த புகாரின் பேரில், முத்தாப்புதுப்பேட்டை போலீஸார், 4 சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில், கவுரவ், அனில், சவான், தீபக் ஆகியோரை நேற்று முன் தினம் இரவு போலீஸார் கைது செய்து, போலி ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடி விமானப் படை நிலையத்தில் நடந்த விமானப் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.