ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். 2 இளைஞர்களை கைது செய்தனர்.
இலங்கைக்கு கடத்துவதற் காக ராமநாதபுரம் வழியாக மண்டபம் நோக்கி போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கியூ பிரிவு போலீஸாரும், போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் இணைந்து நேற்று அதிகாலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் காரிக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னையில் இருந்து மண்டபம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீஸார், வாகனத்தின் இருக்கைகளைத் தூக்கி சோதனை செய்தபோது, மெத்தம்பெட்டமைன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
ஆந்திராவில் இருந்து போதைப் பொருட்களை சென்னை வழியாக காரில் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் வந்து, அங்கிருந்து மண்டபம் தெற்கு கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுப் படகில் கடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. வாகனத்தில் இருந்த போதைப் பொருட்களை எடையிட்டு பார்த்தபோது, அதில் 18 கிலோ மெத்தம்பெட்டமைன், 10 கிலோ ஹெராயின், 218 கிலோ கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.
போதைப் பொருட்களை காரில் கடத்தி வந்த மண்டபத்தைச் சேர்ந்த இப்ராகிம் பாதுஷா (29), முகைதீன் பயாஸ் (27) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையில் கியூ பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மண்டபத்தைச் சேர்ந்த ஷேக் ரஹ்மான் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.