சென்னை: கே.கே. நகரில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, வீலிங் செய்ததாக இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கே.கே. நகர் 100 அடி சாலையில் லட்சுமண் ஸ்ருதி சிக்னல் அருகே நேற்று முன்தினம் அதிகாலை போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 2 இருசக்கர வாகனங்கள் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் சென்று கொண்டிருந்தன. அந்த வாகனங்கள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டபடி சென்றன.
மேலும், அதிக சத்தம் எழுப்பியபடி வாகனங்களை ஆக்ரோஷமாக இயக்கிய இளைஞர்கள், ஒன்றை யொன்று உரசியபடி முந்திச் சென்றனர். மேலும், சாலையில் இடமிருந்து வலமாக தாறுமாறாக வாகனங்களை ஓட்டினர்.
பொதுமக்களுக்கு அச்சத்தையும், ஆபத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டியதுடன், ஆபத்தான முறையில் முன் சக்கரத்தை தூக்கி வீலிங் செய்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் தடுப்புகளை அமைத்து 2 இருசக்கர வாகனங்களையும் மடக்கிப் பிடித்தனர். அவற்றில் பயணம் செய்த 3 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்டவர்கள் கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சந்துரு (21), வினித் (20) மற்றும் ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஆர்யா (19) என்பது தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்த விலை உயர்ந்த இரு பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.