க்ரைம்

ரூ.6 கோடி போதை பொருள் நாகையில் பறிமுதல்: இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங் கைக்கு படகில் போதைப்பொருட்கள் கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், தேசிய போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் நாகை மாவட்டத்துக்கு வந்து பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வேளாங்கண்ணி கார்பார்க்கிங் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் நாகை புதிய நம்பியார் நகரைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் (40), வேதாரண்யம் தும்மாச்சி பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற காஞ்சி நாதன் (31), மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுனாமி குடியிருப்பு மீனவர் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ்(33) என்பதும், ‘மெஸ்கலின்’ என்ற போதை பொருளை கடத்தி வந்து, இலங்கைக்கு படகில் கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ ‘மெஸ்கலின்’ போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸார், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் நாகை குற்றவியல் நீதிமன்ற நடுவர் வீட்டில் ஆஜர்படுத்தி, தொடர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.6 கோடி என கூறப் படுகிறது. இதற்கிடையே, ரவிச்சந்திரனை, கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கி, இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் பாலா அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT