மதுரை: சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பேருந்து புறப்பட்டு வந்தது. அதேபோல, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு ஆம்னி பேருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இந்தப் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்த நிலையில், நேற்று அதிகாலை சாத்தான்குளம் சென்ற ஆம்னி பேருந்தில் ஓட்டுநரை மாற்றுவதற்காக, கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியில் சாலையோரமாக நிறுத்தப்பட்டது.
அப்போது, பின்னால் வந்துகொண்டிருந்த நாகர்கோவில் ஆம்னி பேருந்து, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து மீது மோதி, பின்னர் அருகில் இருந்த மின் கம்பத்திலும் இடித்து விபத்துக்குள்ளானது.
இதில், நின்றிருந்த ஆம்னி பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த செங்கல்பட்டு சுதர்சன் (29), குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேரி சுஜா (45) மற்றும் விபத்து ஏற்படுத்திய பேருந்தில் பயணித்த கோவில்பட்டி கனகரஞ்சிதம் (65) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த மேலூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான போலீஸார், உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காயமடைந்தவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.