பொன்னேரி: பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை விடுவிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சார்-பதிவாளர் உட்பட 3 பேரை நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் சமீபத்தில் பொன்னேரி அருகே உள்ள சிறுளப்பாக்கம் கிராமத்தில் 2 வீட்டு மனைகளை வாங்கி அண்மையில் பொன்னேரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார்.
அவ்வாறு பத்திரப்பதிவு செய்த ஆவணங்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என, நடராஜனிடம் பொன்னேரி சார்-பதிவாளர் சங்கர் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நடராஜன், சார்-பதிவாளர் சங்கர் மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின்படி, நேற்று காலை நடராஜன், பொன்னேரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு எழுத்தர் ரமேஷ், அவரின் உதவியாளர் நித்யா ஆகியோர் மூலம் சார்-பதிவாளர் சங்கரிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.15 ஆயிரத்தை லஞ்சமாக அளித்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், லஞ்சம் வாங்கிய பொன்னேரி சார்-பதிவாளர் சங்கர், இடைத்தர கர்களாக செயல்பட்ட ரமேஷ், நித்யா ஆகிய 3 பேரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.